3:06 pm - Tuesday September 26, 0406

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

3 இலட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், இதில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம்,

மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், எதிர்வரும் 20ஆம் திகதியுடன் இதற்கான கால எல்லை நிறைவடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர்தரப் பரீட்சை குறித்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பிரிவினருக்கு இது குறித்து அடுத்த வாரம் விளக்கமளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விதிமுறைகளை மீறுவோர் ஐந்து வருடங்களுக்கு பரீட்சையில் தோற்ற முடியாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.

Filed in: கல்வி, செய்திகள்

Comments are closed.