3:22 pm - Tuesday September 19, 2017

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க வேலைநிறுத்தம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியம் அறிக்கை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது.

ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று தொடர்பில் ஊழியர் சங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளைக் கோரிப் போராட்டம் ஒன்றினை உரிய கால அவகாசத்தை நிர்வாகத்துக்கு வழங்காமல் திடீரென ஆரம்பித்திருந்தது.

மேற்படி போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த பெண் உத்தியோகத்தரின் நலன் கருதி விரைந்து செயல்பட்டு பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. எனினும் ஊழியர் சங்கமானது தமது பிரதான கோரிக்கைகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தமது கையறு நிலையை மூடி மறைப்பதற்காக தமது போராட்டத்துக்கான கோரிக்கையை மாற்றிக் குத்துக்கரணமடித்து தற்போது முன்னைய கோரிக்கைகளுக்கு சற்றும் பொருத்தமற்ற வகையில் புதிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டத்தை தொடர எத்தனிக்கிறார்கள்.

தமது தூரநோக்கற்ற செயற்பாடுகளின் மூலம் குறித்த பெண் உத்தியோகத்தருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்களை குறித்த தொழிற்சங்கம் தெளித்து விட்டிருந்தது. தற்போது குறித்த பெண் உத்தியோகத்தர் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் திருப்தியுற்று கடமைக்கு திரும்பியுள்ள நிலையிலும் அவருக்காக களமிறங்கிய ஊழியர் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் வீதியில் நிற்கின்ற வினோதமான் காட்சிகளை பல்கலைக்கழக சமூகத்தினர் கண்டு வியந்து நிற்கின்றனர்.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினை ஒத்த பிறிதொரு தெழிற்சங்கமானது மிகவும் நாகரிகமான முறையில் தமது கருத்துக்களை அறிக்கையிட்டிருந்தமை மிகவும் ஆரோக்கியமான செயற்பாடாகும். சம்பவத்தில் ஒரு பெண் ஊழியரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருந்தமையை கருத்திற் கொண்டு அதன் அணுகு முறைகளை முன்னெடுப்பதில் அந்தத் தொழிற்சங்கம் கரிசனையாக இருந்தது.

முகநூலிலும் இணையத்தளங்களிலும் கருத்துக்களைப் பொறுப்பின்றி பதிவிடுவது தான் ஒரு தொழிற்சங்கப் பண்பா என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். மேலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது பெண் ஊழியருக்காக குரல் கொடுப்பதாக அறிவித்த போதும் நடைமுறையில் அன்றைய தினம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர்களை அலுவலகங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய முறைமையும், அவர்களின் தகாத வார்த்தைப் பிரயோகங்களும் அவர்களின் நோக்கத்தையே கொச்சைப்படுத்துவதாக அமைந்திருப்பதை பலரும் அருவருப்புடன் நோக்கினர்.

இச்சந்தர்ப்பத்தில் ஊழியர் சங்கமானது தங்கள் வேலைப் பகிஸ்கரிப்பினை கைவிட்டு நிர்வாகத்துடன் ஒத்துழைத்து தமது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதோடு தமது நீதியற்ற கடும் போக்கினை கைவிட்டு நிர்வாக இயந்திரம் செவ்வனே செயற்பட நிர்வாகத்தின் ஓர் பங்குதாரர் என்ற ரீதியில் தங்கள் ஒத்துழைப்பினை வழங்கி மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி கல்வியை தொடர வழிசமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீண்ட கல்விப்பாரம்பரியத்தின் அடிநாதமாக விளங்கும் யாழ் பல்கலைக்கழத்தில் இவ்வாறான தொடர் இடையூறுகளை தமிழ் சமுகமானது தொடர்ந்தும் அனுமதிக்காது என்பதே எமது ஒன்றியத்தின் ஆழமான கருத்தாகும்.

மேற்படி விடயங்களை சரியான நிர்வாக ரீதியாலான அணுகுமுறைகளினால் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதனையும் அதுவே பல்கலைக்கழகத்திற்கு பலம் சேர்க்கும் என்பதை எமது ஒன்றியம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

நிர்வாக ஊழியர் ஒன்றியம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

தொடர்புடைய செய்தி

????. ??????????? ???? ?????? ???? ??? ?????????? ???? ?????!

Filed in: இப்படியும்.., செய்திகள்

Comments are closed.